வரலாறு
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலம்

முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து “வட பத்ரிகாரண்யம்” ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி “தென் பத்ரிகாரண்யம்” ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.

ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், “பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்”‘ என்று கூறி அருளினார்.

அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.

சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.

               

கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். சோமஸ்கந்தர் திருச்சந்நிதி, தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கின்றது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின்  “ஆளான அடியவர்க்கு அன்பன்தன்னை”  என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல் தோறும் கிழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது  “மின் உலாவிய சடையினர்”  என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் “வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.

      

கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும். தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

இந்திரன் சாபம் நீங்கப்பெற்றது

தேவர்கள் தலைவனான தேவந்திரன் ஒருமுறை மகரிஷியான குரு வசிஷ்டர் வருவதைக்கூட கவனியாமல், தேவலோக அரம்பையர்களின் ஆடல்,பாடலில் மயங்கி களிப்புற்றுக் கொண்டிருக்கவே, சினங்கொண்ட முனிவர் சாபமிட அதனால் தன் செல்வமனைத்தும் இழந்து வருந்திய இந்திரன் இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் உருவாக்கி, அதில் நீராடி,அட்சயலிங்கப்பெருமானை நாள்தோறும் வழிப்பட்டுவரவே, ஒரு மார்கழி மாத அமாவாசைத் திருநாளில் இறைவன்,அம்மையப்பராக,இடப வாகனத்தில் தோன்றிக் காட்சி கொடுத்து,அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் மனமகிழ்ந்த இந்திரன் நன்றிப் பெருக்கோடு தன் சிறப்புக்குரிய வெள்ளையானை (ஐராவதம்) கொடியேற்றி பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தினார். அதனால்தான் இத்தலத்தில் சோமாஸ்கந்தர் – தேவநாயகர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் வீரஹத்தி நீங்கப் பெற்றது

நரகாசுரனை நசித்து பூமியில் தர்மத்தை நிலைபெறச் செய்த மகாவிஷ்ணு (ஸ்ரீகிருஷ்ணர்) அந்த கொலைப்பாவம் நீங்க இத்தலம் ஏகி கேடகற்றும் கேடிலியை அர்ச்சித்து வழிப்பட்டமையால் தன் வீரஹத்தி (கொலைபாவம்) நீங்கப்பெற்றார். அவரே இத்தலத்திற்கு தென் புறம் ஸ்ரீ யாதவ நாராயணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் தனிகோயில் கொண்டு விளங்குகிறார்.

பிரம்மதேவர் ஆற்றலை அடைந்தது

மூவருள் ஒருவராய் படைப்புத் தொழில் புரிந்து வரும் பிரம்மா ஒரு முறை தனது படைக்கும் ஆற்றலை பற்றி மிகுந்த கர்வம் கொண்டு விளங்கவே, படைக்கும் ஆற்றல் அவருக்கு குறையத் தொடங்கியது. அதனால் அல்லலுற்ற பிரம்மா, இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி,அதில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டதால் மீண்டும் படைப்புத் திறனைப் பெற்றார். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து மூவரது உடலும் சிவனாரின் ஒற்றைக் காலில் நின்ற நிலையில் ஏக பாதத்ரி மூர்த்தியாக தவமியற்றி வழிப்பட்டு வரவே அதன் பயனாய் பிரம்ம தேவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றலை அஷயலிங்கப் பெருமான் அருளிச் செய்தார்.

அக்னிபகவான் சாபம் நீங்கியது

தேவலோக மருத்துவர்கள் ஒரு யாகம் செய்து அதன் அவிர்ப்பாகத்தை அக்னிபகவானுக்கு அளித்தபோது, அதை அவர் அருவருப்புடன் ஏற்றுக்கொண்டதால் குன்மநோய் பீடிக்கப்பட்டு வருந்தினார். பின் இங்கு வந்து அக்னி தீர்த்தம் உண்டாக்கி, அட்சய லிங்கப்பெருமானை வழிப்பட்டு அந்நோய் நீங்கப் பெற்றார்.

எமனுக்கு ஏற்றமளித்தது

சிவனுக்கும், சித்தத்தை சிவன்பாலே வைத்த சீலர்களாகிய சிவனடியார்களுக்கும் தான் செய்த தீவினைகள் அனைத்தும் தீர்த்திட இப்பதரிவனத்திற்கு வந்து எமதீர்த்தம் அமைத்து அதில் நீராடி கேடுகள் அகல கேடிலியப்பரை வழிப்பட்டமையால் மீண்டும் தூய்மையடைந்தார் எமதர்மராஜன்.

விதுர்மனுக்கு விமோசனம் தந்தது

மராட்டிய அரசனாக இருந்த விதுர்மன் எனும் அரசன் திடீரென ராஜபோகம்,மது,மாமிசம் என அனைத்தையும் விட்டு சிவபூஜையில் முழுதும் திளைத்திருக்க,அதுகண்டு ஆச்சரியமடைந்த அந்த நாட்டு அரசி அது பற்றி காரணம் கேட்க, அப்போது அரசன் விதுர்மன், நான் முற்பிறவியில், பூவுலகில் என்றும் நிலைப்பெற்று விளங்கும் திருத்தலமாகிய தட்சிண பதரிகாரண்ய திருத்தலத்தில் குரங்காகப் பிறந்து வாழ்ந்து வருகையில் ஒரு சிவராத்திரி திருநாளில் அத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாளிக்கும் சிவலிங்கத்திற்கு அருகிலிருந்த வில்வமரத்தின் மீதமர்ந்து, வில்வ இலைகளைப் பறித்துப் போட, அவை சிவபூஜை செய்து கொண்டிருந்த அந்தணரது தலையில் விழுந்து கொண்டிருந்தமையால் சினங்கொண்டு அவர் என்னை கல்லால் அடித்துக் கொன்றார். ஆயினும் இறைவன் எனக்குக் காட்சி தந்து, சிவராத்திரியில் வில்வ இலைகளால் அந்தணரை அர்ச்சித்த புண்ணியத்தால், நீ மறுப்பிறப்பில் அரசனாகப் பிறந்து சகல உலகங்களையும் ஆண்டு, அகத்தியரின் உபதேசப்படி மீண்டும் பதரிவனம் வந்து எம்மை அடைவாய் என்று அருளினார். நீயும் அந்தப் பிறவியில் ஒரு பூனையாக அதே தலத்திலிருந்து வந்தாய்,ஒரு நாள் அட்சயலிங்கப் பெருமானின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பசும்பாலை நீ குடிக்கக் கண்ட பரிசாரகர் உன்னைத் துரத்த,நீ அத்தல இறைவனை சுற்றி சுற்றி ஓடியும்,அவர் உன்னை அடித்துவிட, நீ இறைவனது திருவடியில் வீழ்ந்து இறந்தாய்,இறைவனை வலம் வந்தமையால் நீ மறுபிறவியில் அரசியாக என் மனைவியாக வந்திருக்கிறாய். தற்போது அகத்தியரிடம் உபதேசம் பெற நாம் அத்தலம் செல்வோம் என்று கூறிட இருவரும் பதரிவனம் வந்து அகத்தியரிடம் உபதேசம் பெற்று இறைவனது திருவடியை அடைந்தனர்.

தர்மஞ்ஞன் பெற்ற தவப்பயன்

தாமிரபரணி நதிக்கரையிலுள்ள வேணுவனம் என வழங்கப்பட்ட (இன்றைய திருநெல்வேலி) தலத்தில் வாழ்ந்து வந்த தர்மஞ்ஞன் என்ற அந்தணன் தனது தாய், தந்தையரிடம் மிகுந்த பக்தி கொண்டவனாய் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வருகையில், இருவரும் ஒரே நேரத்தில் சிவபதமடைய அவர்களது அஸ்தியை கங்கையில் கரைக்க எண்ணிச் செல்லும் வழியில் திருக்குடந்தைத் தலத்தில் வழிபாடுகள் செய்கையில் அசரீரியாய் சிவபெருமான் நீ தட்சிண பதரிவனம் செல்க எனக் கூறவும், இங்கு வந்த தர்மஞ்ஞன், அஸ்தி கடத்தை சரவணப் பொய்கையின் கரையில் வைத்துவிட்டு நீராட , அப்போது பெரு மழை பெய்து கடத்தை புஷ்கரணியில் சேர்க்க , கடத்திலிருந்த அஸ்தி தடாகத்தில் தாமரை மலர்களாக மலர்ந்திருந்தது. தன் பெற்றோரின் அஸ்தி குளக்கரையில் இல்லாமையால் வருத்தமுற்ற தர்மைஞ்ஞனுக்கு இறைவன் அசரீரியாய், இந்த தீர்த்தம் கங்கையின் சிறப்புமிக்கது,அதில் விழுந்த உன் பெற்றோரின் அஸ்தியே இத்தாமரை மலர்கள் . அவர்களுக்கு யாம் சிவலோக பதவி அளித்துவிட்டோம் , நீ கவலையின்றி இத்தலத்திலேயே வழிபாடுகள் செய்வாய் , என்று அறிவிக்க ,மகிழ்ச்சியுற்ற அந்த அந்தணனும் இத்தலத்திலேயே தங்கியிருந்து அட்ச யலிங்கப் பெருமானின் அடிபணிந்து ஆனந்தமடைந்தன்

கழுதை கண்ட தரிசனம்

சிங்கத்துவஜன் என்ற அரசன் காட்டில் வேட்டையாடி, நீர் வேட்கையால் ஒரு முனிவர் ஆசிரமம் சென்று வாசலில் நின்று தன் அதிகாரச் செருக்கால் நீர் கேட்டு சப்தமிட , அங்கு தவத்திலிருந்த பாரத்வாஜமுனிவர் சினங்கொண்டு கழுதையாகப் போகுமாறு அரசனை சபித்தார் . அதை போல அகத்தியரை விந்திய மலையில் தரிசிக்கச் சென்றவர்களை ஒரு காட்டரசன் தாக்கி கொள்ளையிட , அவர்களும் அவனைக் கழுதையாகப் போகுமாறு சபித்தனர். இவ்விரு கழுதைகளும் ஒரு வணிகனது பொதிகைகளைச் சுமந்து கீழ்வேளூர் தலத்திற்கு வந்தபோது வணிகனும் , கழுதைகளும் பிரம்ம தீர்த்ததில் தாகம் தணித்துக் கொண்டு இரவில் அந்த குளக்கரையில் தங்கியிருக்க , அவ்விரு கழுதைகளும் , தங்கள் முன் பிறப்புகளின் வரலாறுகளை மனித குரலில் பேசிக்கொள்வதை கேட்ட வணிகன் ,பயந்து கழுதைகளை அங்கேயே விட்டு விட்டு போய்விட , இரு கழுதைகளும் , வீதி வலம் வந்து அட்சலிங்கப் பெருமானை தியானிக்க , இறைவன் அவைகளை ஆடி மாத பௌர்ணமி முதல் சதுர்த்தி வரை பிரமதீர்த்தத்தில் நீராடி , நீரை ப்பருகி எம்மை வழிப்பட்டால் மனித உருவமடைவீர்கள் என அருள , அவ்வாறே வழிப்பட்டு நற்கதியடைந்தனர்.

உற்பலாங்கி பெற்ற உன்னதப் பேறு

துங்கபத்திரா நதிக்கரையில் வசித்து வந்த அகோபன் என்ற அந்தணரின் புத்திரியான உற்பலாங்கி பருவமெய்தியும் தகுந்த வரன் கிடைக்காமல் வருந்த, அச்சமயம் அவர்கள் இல்லத்திற்கு விருந்தினாராக வந்த ஓர் அந்தண பிரம்மச்சாரிக்கு மணம் செய்து கொடுக்க மறுகணமே அவன் இறந்துவிட, விரக்தியடைந்த உற்பலாங்கி ஸ்தல யாத்திரையாகப் பற்பல தலங்கள் சென்று ஒருநாள், பதரிவனம் வந்து சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி எழ அவளது பாபங்கள் விலகிட அவள் முன் ஒரு முனிவர் ஆசிரமம் தென்பட, அங்கு சென்று, அம்முனிவரைப் பணிந்து வணங்கினாள். அவளது முன்வினை உணர்ந்த முனிவரும் அப்பெண்ணிடம் நீ முற்பிறவியில் கௌரி நோன்பை முழுமையாக அனுஷ்டித்து பூர்த்தி செய்யாமல் விட்டமையால் இவ்வாறு நேர்ந்தது. அதை முழுமையாக செய்து இத்தல இறைவியான சுந்தரகுஜாம்பிகையை வழிபட நன்மை உண்டாகுமென அருளினார். அவ்வாறே உற்பலாங்கியும் வழிப்பாட்டை நிறைவு செய்ய, வனமுலைநாயகி அவளது கணவனை உயிர்ப்பித்துத் தந்தருள, இருவரும் மகிழ்வுடன் நல்லறமாய் இல்லறம் மேற்கொண்டனர். இங்கு வைகாசி மாதத்தில் சோமவாரத்தில் நண்பகலில் சூர்ய தீர்த்தத்தில் நீராட, மங்கள வாழ்வும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்

மழுவெறிந்து கண்டித்து மறையோனுக்கு அருளியது

அட்சயலிங்கப் பெருமானுக்கு பூஜைகள் செய்து தொண்டாற்றிய ஓர் ஆதி சைவரின் மனைவி கருவுற்ற இரண்டாவது மாதம், அவர் இறந்துவிட, தன் பிறந்த வீட்டிற்குச் சென்று ஆண் மகவு ஈன்று, சிவாகமபண்டிதன் எனப் பெயரிட்டு, வளர்த்து, தக்க வயதில் தன் மகனை இத்தலத்திற்கு அழைத்து வந்து மீண்டும் பூஜை முறைகளை அளிக்கும்படிக் கேட்க, அவர்களோ, அவளது கற்பை சந்தேகித்து, அடாத வார்த்தைகளால் அவதூறாகப் பேச, தன் மகனோடு, அந்த அபலைப் பெண் அட்சயலிங்கப் பெருமானிடம் முறையிடவே, சினங்கொண்ட சிவனாரும், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை விலகச் செய்து தம் கரத்திலிருந்து மழுவை எறிந்து, அவதூறு பேசியவர்களின் சிரங்களைக் கொய்திட்டார். அதைக் கண்ட மற்றோர் அனைவரும் அந்தப் பெண்மணியின் மைந்தனுக்கு பூஜை முறைகள் மீண்டும் வழங்கினார்.

ஆடும் அற்புதம் பெற்ற அருட்தலம்

உக்ரவீரட்டானன் என்ற ஒரு ஆட்டு வணிகன் அவ்வூரில் ஆடுகளை வளர்த்துக் கொன்று அதன் மாமிசத்தை விற்று வந்தான். அவனது மகனான மகர வீர்யனும் தந்தையின் தொழிலைத் தொடர்ந்து வரும் ஒரு நாளில் அன்றைய தினம் வெட்டுவதற்காக கட்டியிருந்த ஓர் ஆடு காணாமல் போகவே, அதைத் தேடி வந்தான். அப்போது அங்கே இத்தலத்தின் தீர்த்தக் கரையில் நீராடி சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த லிகிதரிஷி எனும் முனிவர் முன் சென்று மகரவீரியன் இப்பக்கம் ஆடொன்று வந்ததா என வினவினான். அப்போது பிராணாயாமம் செய்து கொண்டிருந்த ரிஷி தன நாசியிலிருந்து வலது கையை எடுத்துக் காதைத் தொட, மகரவீர்யனோ அவர் ஆடு சென்ற திசையைக் குறிப்பதாக எண்ணி அத்திசையில் தேடிச் செல்ல ,அங்கே ஆடு நின்றிருக்க பிடித்துச் சென்றான்.ஆடு கொலையுண்டு போக லிகித ரிஷி காரணமாகிடவே,அவர் இறந்தபின் எமலோகம் சென்றவுடன் ,அதே மகரவீர்யன் வீட்டில் அவரும் ஆடாகப் பிறந்து ஒருநாள் வெட்டுவதற்காக கொலைக்களம் அழைத்து வரப்பட்டார்.அப்போது ஆடு சிரிக்கவே,அதன் காரணமறிந்த ,மகரவீர்யன் ஆட்டை காட்டியதாகக் கருதப்பட்ட குற்றத்திற்க்கே இந்தத் தண்டனை எனில் ,தான் தினந்தோறும் ஆடுகளைக் கொன்று வருவதற்கு என்ன தண்டனை வருமோ என எண்ணித் தன் கத்தியை தூர வீசி எறிந்தான்,அக்கத்தியே அவனுக்கு குருவாகி ஞானமளித்தமையால்.அக்கத்தி விழுந்த இடமே,குருக்கத்தி என்றழைக்கப்படுகிறது.அங்கே ஓர் ஆலயம் அமைத்து,அதில் கட்கபுரீஸ்வரர் என்ற நாமங்கொண்ட சிவனை ஸ்தாபித்து வழிபட்டு முக்தியடைந்தான்.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் (இரண்டாம் திருமுறை)

திருக்கீழ்வேளூர் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
யோடிட வீடாமே.    2.105.1

நீரு லாவிய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய இறைவன துறைவிடம்
எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
பிணியொடு வினைபோமே.    2.105.2

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
உலகினில் உள்ளாரே.    2.105.3

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளும் நாதனார்
நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
நிலைமிகப் பெறுவாரே.    2.105.4

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவர் இனிதியனல்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே.    2.105.5

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திருக் கோயில்மன்னும்
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய இடர்போமே.    2.105.6

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டர்எண் தோளினர்
காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
பெருந்திருக் கோயில்மன்னும்
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே.    2.105.7

மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை
யெடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினையவல் வினைபோமே.    2.105.8

மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு
மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
பாகனைப் பரிவோடும்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே.    2.105.9

சீறு லாவிய தலையினர் நிலையிலா
அமணர்கள் சீவரத்தார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திருக் கோயில்மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி
பேணுமின் தவமாமே.    2.105.10

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே.    2.105.11

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் (ஆறாம் திருமுறை)

திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.1

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.2

அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை
ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.3

தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.4

நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.5

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.6

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும்
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.7

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.8

மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.9

முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.10