முக்கிய அறிவிப்பு :
பாவ விமோஷனம் அளித்திடும் அட்சய க்ஷேத்திரம், ஐஸ்வர்யம் அளித்திடும் குபேர ஸ்தலம், அருள்மிகு அஞ்சுவட்டதம்மன் ஸ்தலம், ஸ்ரீ முருகப்பெருமான் வீரஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற ஸ்தலம், சர்வதோஷ பரிகார ஸ்தலம்
‘கங்கையின் புனிதமாய காவிரி’ என்ற சிறப்புகுரியதான பொண்ணு நதியின் கிளை நதியாம் அகத்திய காவிரி என்ற பெயர் பெற்ற வெட்டாற்றினின்று பிரிந்து, திருஞானசம்பந்தப் பெருமானுக்கும், நம்பிரான் தோழர் நம்பியாரூரருக்கும் இறைவர் ஓடம் விட்டு திருவருள் புரிந்தமையான் ‘ஓடம்போக்கி’ என்ற பெயர் நிலைபெற்றுத் திகழும் சிற்றாற்றின் தென்கரையில் திகழும் பெருந்திருக்கோவில் திருகீழ்வேளூர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவிலாகும். இக்கோயில் மாடக்ககோவில் அமைப்பைச் சார்ந்ததாகும்.
பண்டைய சோழ வளநாட்டின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளங்கும் உன்னத திருத்தலமாகிய இந்த திருகீழ்வேளூர் திருத்தலம், விடங்கத் தியாகேசர் திருவருள் புரியும் திருவாரூர்த் திருத்தலத்திற்கு கிழக்கே 12 கி.மீ. தொலைவிலும், கடல்நாகைக் காரோணம் மேவியிருக்கும் காயாரோகண சுவாமி காட்சி தரும் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும், தேவகுரு வழிபாடு செய்த தேவகுருநாத சுவாமி தரிசனம் தந்தருளும் திருத்தேவூர் திருத்தலத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவிலும், மலரும் மருகல் உடைய பெருமானாம் மாணிக்கவண்ணர் திருமணப்பேறு தந்தருளும் திருமருகல் திருத்தலத்திற்கு தெற்கே 14 கி.மீ. தொலைவிலும் திருவாரூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 84-ஆவது சிவத்தலமாகும். ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் ஜோதியாக விளங்கும் இறைவன் அருவுருவாய் பற்பலராலும் வழிபடப் பெரும் தன்மை உடையவன். அந்த பரம்பொருளாகிய சிவபெருமான் உலகெல்லாம் உணர்ந்து ஓதற்காக சிவலிங்க உருக்கொண்டு எழுந்தருளி தம்மை நாடி வந்து அன்பர்கள் வழிபட்டு, ஆன்மாக்கள் கடைத்தேற அருளிச்செய்யும் திருத்தலங்கள் பல பல.
அவற்றுள் பொன்னி வளந்தரும் சோழ வள நாட்டின் கண், எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது உலகாண்ட கோட்செங்கட்சோழ நாயனாரால் நிர்மாணிக்கப்பட்ட சிறப்பு உடையதும், அழிவில்லாத தலமாகவும், தன்னை நாடி வந்து வழிபடுவோர்க்கு கேடில்லா வாழ்வளிக்கும் இறைவனான அருள்மிகு கேடிலியப்பர் பெருமான் எழுந்தருளி ஆட்சி செய்து வரும் புண்ணிய தலமாகவும், அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன், அருள்மிகு குபேரர் போன்ற தெய்வ சன்னதிகள் பொலிவுடன் விளங்கும் சிறப்பானதும் முருகப்பெருமானின் வீரஹத்திதோஷம் (கொலை பாவம்) தீர்த்த தலமாகவும், தமிழ் முனியாம் குறுமுனி அகத்தியர் காலத்திற்கு முன்பே திகழ்கின்ற பெருமைக்குரிய திருத்தலமாகவும் விளங்குவது திருகீழ்வேளூர் திருத்தலமாகும்.