வரலாறு
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலம்

முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து “வட பத்ரிகாரண்யம்” ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி “தென் பத்ரிகாரண்யம்” ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.

ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், “பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்”‘ என்று கூறி அருளினார்.

அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.